ஜி.வெங்கட்ராமன்
ஜி.வெங்கட்ராமன்

ஜி.வெங்கட்ராமன்

“ராஜா மகிழ்ந்தார்!”
காந்திருந்த ரஜினி...
காந்திருந்த ரஜினி...
பரபர மோடி..
பரபர மோடி..

கால் நூற்றாண்டாக விளம்பரம்,
சினிமா, காலண்டர் வடிவமைப்பு என அனைத்திலும் தனி முத்திரை பதித்திருப்பவர் ஜி.வெங்கட்ராம். பிற வேலைகளை நான்கு மணி நேரம் தள்ளி வைத்து மோடியை தனது இயக்கத்துக்குள் நிற்க வைத்தது இவரின் கேமரா. கோட்டூர்புரத்தில் அவரின் ஸ்டுடியோவில் சந்தித்துப்பேசினோம்.

பொறியியல் படித்தவர், போட்டோகிராபிதான் தன்னுடைய வாழ்க்கை என படிப்பு முடிவதற்குள் உணர்ந்துவிட்டார். இன்றைய தினம் தமிழ் திரையுலகில் ஃபர்ஸ்ட் லுக் எடுக்கவேண்டுமானால் கூப்பிடுங்கள் ஜி.வெங்கட்ராமை என்கிறார்கள். அவரது சில ஃபர்ஸ்ட் லுக் அனுபவங்கள்:

 ''பருத்தி வீரன் படத்தின் கதையைக் கேட்டேன். அப்போது ஹீரோ, ஹீரோயின் மட்டுமே முடிவாகி இருந்தனர். அவர்களோடு தேனிப் பகுதிக்கு போய் பல லொக்கேசன்களைத் தேடி அலைந்தோம். அப்போது பருவக்காற்று ஆரம்பித்திருந்த நேரம். பின்னணியில் கருமேகம் இருக்க, இந்த படத்திற்கு ஒரு போஸ், அங்கிருந்த செம்மண் தரையோடு இருந்தால் நல்லா இருக்கும் எனத் தேடியபோது பிரவுன் கலரில் அதுவும் ஆரஞ்சு பிரவுன் கலரில் செம்மண் தரை பொட்டலாக இருந்தது. அதில் கையில் அரிவாளோடு கார்த்தியையும் பிறரையும் நிறுத்தி ஷூட் போனோம். கருமேகம், பழுப்பு நிலம் இந்த ஃபீலிங் தான் அதைத் தீர்மானித்தது. படம் ஆரம்பிக்க ஆறுமாதங்கள் தாமதமானது. பின்னர் போய்ப் பார்த்தால் நாங்கள் ஷூட் பண்ணிய பகுதி எல்லாமே பச்சைவெளியாக மாறியிருந்தது. அதே மாதிரி செம்மண் பொட்டலைத் தேடிச் சென்று படத்தை மதுரைப் பக்கம் ஆரம்பித்தனர்.

சினிமாவில் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு நான் தரும் ஆலோசனைகளை இயக்குநர்கள் ஏற்றுக் கொள்வர். அஞ்சான் படத்தில் சூர்யா ஒரு காஸ்ட்யூமில் வந்தார். கையில் துப்பாக்கியோடு குதித்தபடியே குறிதவறாமல்
சுடும்படி ஒரு ஷாட் வைத்தால் நன்கு வரும் என அந்த ஸ்பாட்டில் ஆலோசனை சொன்னேன். இயக்குநரும் ஒத்துக் கொண்டார். அந்த சீன் நல்லா வந்தது.

ஆனால் விளம்பரப் பட விஷயம் வேறு. அதில் என்ன பொருளை மார்க்கெட் செய்யணும், யார் இலக்கு, அவர்களின் கலாசாரம் என்ன என ஏகப்பட்ட டேட்டா எடுத்து ஆய்வு பண்ணி கார்ப்பரேட் அலுவலகத்தில் விவாதித்து அப்ரூவல் வாங்கி வந்திருப்பார்கள். அதில் நாம் தலையிட்டு ஆலோசனை சொல்ல முடியாது.

ராஜாவின் சங்கீதம்...
ராஜாவின் சங்கீதம்...

ஒரு நாளில் யாரை நான் போட்டோ எடுக்கிறேனோ அந்த ஷூட் நல்லா வரணும். அன்றைக்கு அவர்தான் எனக்கு அமிதாப்பச்சன் என்று நினைப்பேன்.  இன்று என்ன ஷூட் என்று நான் கேட்கும்போது என்அசிஸ்டெண்ட்கள் 'சின்ன போர்ட்போலியோதான்' என்று சொன்னால், அவ்வாறு சொல்லக் கூடாது என்பேன். அன்று பள்ளி மாணவியாக இருக்கையில் மாடலிங் செய்த&நான் போட்டோ ஷூட் எடுத்த த்ரிஷா பின்னாளில் பாப்புலராக ஆகியிருக்காங்க. சின்னவர் பெரியவர் என்று பார்ப்பது கிடையாது.

சமீபத்தில் பிகில், மாபியா, ராங்கி படங்களில் பர்ஸ்ட் லுக் பண்ணியிருக்கிறேன். பிகில் படம் மட்டுமல்ல, விஜய் சாரின் பெரும்பாலான படங்களுக்கு  செய்துள்ளேன். இந்தப் படத்தில் வேறு வேறு கெட்&அப் பில் விஜய் சாரை ஷூட் செய்தேன். விஜய்  வெகுவேகமாக வேலை செய்து தனது தோற்றங்களை மாற்றிக் கொண்டு ஒத்துழைப்பு தந்தார். ஒரே நாளில் எல்லா கெட் - அப்பிலும் தன்னை மாற்றிக் கொண்டு, காலையில் ஆறு மணிக்கு ஆரம்பித்து இரவு பத்து மணி வரை நான் ஸ்டாப்பாக செய்து தந்தார். ஸ்டுடியோவில் மீன் மார்க்கெட் மாதிரி செட் போட்டு உண்மையிலே மீன்களை வரவைத்து எடுத்தோம். அதில் இரண்டு கெட் - அப்பில் விஜய் - ஒருவர் வேட்டி அணிந்தபடி உள்ள மீன் வியாபாரி தோற்றத்திலும் அவர் பின்னால் இன்னொரு விஜய் ஃபுட்பால் கோச் தோற்றத்திலும் இருப்பதாக ஷாட் எடுத்தோம். இன்னொரு ஷாட், விஜய் ஸ்டேடியத்தில் இருப்பது போல், பின்னால் கோல் போஸ்ட் இருப்பது போல் எடுத்தோம். இன்னொரு ஷாட், கோச் ஆக விஜய்யிடம் பயிற்சி பெறும் ஆண்கள், பெண்களை வைத்து, அதில் அதிகம் பெண்கள், ஒரு ஷாட் எடுத்தோம். எல்லாம் ரொம்பவும் சரியாக வந்தது. அதில் ஒவ்வொரு தோற்றமும் வேறு வேறு மாதிரி, அதே போல் வெவ்வேறு வயதைக் காட்டும் வகையில் லுக்கே மாற்றி விஜய்  வருவது போல் சேலஞ்சிங்கான ஷாட். அவரின் வேகமும் ஒத்துழைப்பும் அந்த பர்ஸ்ட் லுக்கை பிரமாண்டமாக்கியது.

சிங்கப்பெண்ணே... சிந்து
சிங்கப்பெண்ணே... சிந்து
சிங்கப்பெண்ணே... சாய்னா
சிங்கப்பெண்ணே... சாய்னா

சிவாஜி படத்துக்கு ரஜினி சாரை வைத்து முழுநாள் ஏவி எம் ஸ்டுடியோவில் போட்டோ ஷூட் போனோம். அவர் தண்ணீர்க் குட்டை செட்டில் அமர்ந்தவாறு காசை சுண்டிப் போடும் காட்சியை எடுத்தோம். காசை சுண்டிய பின் கிராபிக்ஸ் போகலாம் என்று டாப் ஆங்கிளில் எடுக்க கிரேன் ஷாட் வைத்திருந்தேன். அன்று அதுதான் கடைசி ஷாட்.  நான்கு மணி ஆகி விட்டது. எல்லாம் நல்லபடியாக முடித்த பின் பேக்கப் சொல்லி விட்டுக் கிரேனை விட்டு இறங்கக் கால் மணி நேரம் ஆகிவிட்டது. கீழே ஒருவர், ''சார் உங்களுக்காக வெயிட் பண்றார்'' என்றார். ரஜினி சார் கால் மணி நேரம் எனக்காக காத்திருந்து ''சார் பிசியா இருந்தீங்க. தேங் யூ'' என்று என்னிடம் சொன்னார். எவ்வளவு பெரிய மனிதர்.. எனக்காக காத்திருந்திருக்கிறாரே என நெகிழ்ந்தேன்.

 ஒரு ஜுவல்லரி விளம்பரத்துக்காக அமிதாப்
சாரை மும்பையில் ஒரு பாழடைந்த பங்களாவில் போட்டோ ஷூட் பண்ணினேன். அன்று பார்த்து மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது. அந்த ஒரு நாளில் ஆறு விதமான காஸ்ட்யூமில் மாற்றி மாற்றி ஷாட் எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் வெளியே போய் காரவானில் உடை மாற்றி வந்தால் நேரமாகி விடும். என்ன செய்வதெனத் தெரியவில்லை. அமிதாப் நிலைமையைப் புரிந்து கொண்டார். நேரே பால்கனிக்கு போனார். ஸ்கிரீன் மாதிரி ஒன்றை செட் பண்ணி, அதன் பின்னால் சென்று வந்தார். அத்தனை வயதிலும் கொஞ்சமும் அசராமல், ஒரு மணி நேரத்துக்குள் ஏழு விதமான மாற்றங்களை செய்து ஷூட் முடிக்க ரொம்பவும் ஒத்துழைப்பு தந்ததை என்னால் மறக்க முடியாது.

மணப்பெண்ணே : சாயிஷா
மணப்பெண்ணே : சாயிஷா
ரகுல் ப்ரீத் சிங்
ரகுல் ப்ரீத் சிங்

இளையராஜா சாரை ஷூட் பண்ணிய அனுபவம் மிகவும் நெகிழ்வானது. நெருங்கிய நண்பராகி விட்டார். என்னிடம் இருந்த சின்ன வீடியோ கேமராவில் அவர் பேசுவதை எல்லாம் ஷூட் செய்தேன். அவரின் முழு சரித்திரத்தையே அன்று சொல்லிவிட்டார். அவர் ஆர்மோனியம் வாசிப்பது போல் போஸ் கொடுக்கும்போது கையை உயர்த்த
சொன்னதும், உடனே ஒரு மெட்டுப் போட்டு ''கையைத் தூக்க சொன்னார்... நானும் தூக்கினேன்'' எனப் பாடினார். ரொம்ப குஷியாகி நான்கைந்து மெட்டுகள் உடனே போட்டு ''போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? இந்தா தாரேன் வாங்கிக் கொள்; இன்னும் சிலது தாரேன்'' எனப் பாடிக் கலக்கி விட்டார்.                                                                       

அக்டோபர், 2019.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com